ஸ்ரீ ஐயப்ப சங்கத்தின் தோற்றம்

இந்த வளாகத்தில் ஏற்கனவே அமையப் பெற்றுள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் சந்நிதி, 1962 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் நாள் காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ‘இந்த இடத்தில் பெரிய ஆலயம் ஒன்று அமையும்’ என்று சுவாமிகள் அன்றைக்கே திருவுளம் பற்றியிருப்பார் போலும். இதே எண்ணம் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த நல்ல உள்ளம் படைத்த பல அன்பர்கள் மனதில் அருள்வாக்காகப் பதிந்து இன்று நாம் காண்கின்ற இந்த அற்புதமான ஸ்ரீ ஐயப்பன் ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது.

கோயில் அமைப்பு

சபரிமலை பிரம்மஸ்ரீ கண்டரு மஹேஸ்வரரு தந்திரி அவர்களால் சிலா ஸ்தாபனம் செய்யப்பட்டு, முதல் கும்பாபிஷேகம் 27.06.1985 அன்றும், இரண்டாவது கும்பாபிஷேகம் 13.12.1995 அன்றும், மூன்றாவது கும்பாபிஷேகம் 09.12.2004 அன்றும், நான்காவது கும்பாபிஷேகம் 15.12.2014 அன்றும் நடைபெற்றன.

ஸ்ரீ ஐயப்பன் சந்நிதானம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 50 அடிகள் உயரம் கொண்ட துவஜஸ்தம்பம் கம்பீரத் தோற்றத்துடன் அமைந்துள்ளது. துவஜஸ்தம்பத்தை அடுத்து அழகாக மணிமண்டபம் அமைந்துள்ளது. இதை அடுத்து மூலஸ்தானத்தில் சின் முத்திரை காட்டி, ‘‘கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்போடு’’ பகவான் ஸ்ரீ ஐயப்பன் அருள்பாலித்த வண்ணம் காட்சியளிக்கிறார். பூஜைகள், கேரள தாந்தீரிக முறைப்படி செய்யப்படுகின்றன.

மூலஸ்தானத்தின் வலதுபுறம் கன்னிமூலை கணபதி தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார். சந்நிதானத்திற்கு நேர் பின்புறம் நாகராஜாவும், இடதுபுறம் ஸ்ரீ பகவதி அம்மனும் பிரசன்னமாகி இருக்கிறார்கள். அடுத்தாற்போல் நவக்கிரஹங்களின் சந்நிதானம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான அன்பர்கள் அமர்ந்து தியானம் செய்யும் வகையில் தியான மண்டபம் அமைந்துள்ளது.

எல்லா பூஜை நேரங்களிலும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன.

சக்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகே உள்ள அரசமரம் தலவிருட்சமாக கொள்ளப்பட்டுள்ளது.

கோயிலின் முக்கிய நோக்கங்கள் இரண்டு : தூய்மையும் அமைதியும்.