கோவில் சிறப்புகள்

  • ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் ஜாதி, மத, இன வேறுபாடின்றி எல்லோரையும், எந்தப் பாகுபாடுமின்றியும், எவ்வித ஏற்றத்தாழ்வு இல்லாமலும் அனைவரும் சமமாக நடத்தப்படுகின்றனர்.
  • வெளிநாட்டினரும் உள்ளே வந்து வழிபாடு செய்யவும், தியானம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • முறையான ஆடை அணிவது (Dress Code) வலியுறுத்தப்படுகின்றது
  • சுவாமியின் பெயரில் மட்டுமே புஷ்பாஞ்சலி அர்ச்சனை செய்யப்படுகிறது.
  • பூஜை வழிபாடுகளில் வியாபார நோக்கம் இல்லை. கோயிலில் உண்டியல் இல்லை. தட்டில் காசு போடும் பழக்கமும் இல்லை. அர்ச்சனை செய்ய தட்சிணை இல்லை. கோயில் பணியாளர்கள் எந்தச் சன்மானமும் பெற்றுக் கொள்வதில்லை.
  • கோயிலின் வரவு செலவுக் கணக்குகள் ஐயப்பன் சந்நிதானத்தில் தினந்தோறும் வாசிக்கப்படுகின்றன.
  • கோயிலுக்கு வரும் அன்பர்கள் தாமாகவே முன் வந்து ஒரு மெல்லிய நூலுக்கு கட்டுப்பட்டு மிக அமைதியாக தரிசனம் செய்வது ஒரு அற்புதக் காட்சியாகும்.
  • 50,000 பக்தர்கள் வந்தாலும் ஒரு ஒழுங்கிற்குக் கட்டுபட்டு நூல் அறுபடாமல் வரிசையில் வருதல் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும்.
  • சங்க உறுப்பினர்களும் அலுவலகப் பொறுப்பில் உள்ளவர்களும், சேவையாளர்களும் தம்மை எதற்குமே முன்னிலைப்படுத்தாமல், வரிசையில் நின்றுதான் பிரசாதம் பெறும் வழக்கம் இங்கு நடைமுறையில் உள்ளது.
  • ஸ்ரீ ஐயப்பன் சந்நிதியின் பின்புறம் ஒரு தபால் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. அன்பர்கள் தங்களது பிரார்த்தனைக் கடிதங்களை இதில் சேர்ப்பிக்கலாம். ஒவ்வொரு மாதமும் சுவாமியின் ஜென்ம நட்சத்திர தினமான ‘உத்திரம்’ அன்று இக்கடிதங்கள் சுவாமியின் பாதங்களில் சமர்ப்பிக்கப்பட்டு நியாயமான வேண்டுதல்கள் நிறைவேற சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படுகிறது. பின்பு, இக்கடிதங்கள் அனைத்தும் Paper Shredding Machine மூலம் அழிக்கப்படுகின்றன. அன்பர்களின் ஆத்மார்த்தமான வேண்டுதல் பற்றி ஸ்ரீ ஐயப்பனுக்கு மட்டுமே தெரியும். வேறு யாரும் படித்துப் பார்ப்பதில்லை. தெரியாமலும் அறியாமையினாலும் தாம் செய்த தவறுகளையும், பாவங்களையும் உணர்ந்து ஆத்மார்த்தமாக மன்னிப்பு கேட்டு, மன்னிப்பு கடிதம் சமர்ப்பிக்கும் பழக்கமும் அன்பர்களிடையே உண்டு. அப்படி செய்வதினால் அன்பர்கள் மனநிம்மதி பெறுகின்றனர்.
  • அம்மா சந்நிதி
    ஒவ்வொருவரும் தமது தாயை நினைத்து வணங்குவதற்கு ஏதுவாக ‘அம்மா’ சந்நிதி தனியே உள்ளது. தாயாருக்கு சிராத்தம் செய்யும் ஒரே தலமான மாத்ரு கயா (குஜராத்) பற்றிய தகவல் தரப்பட்டுள்ளது.
  • புனிதக் கற்கள் மேடை 
    1998 ஆம் ஆண்டிலிருந்து இந்த சங்கத்தின் மூலமாக ஆன்மிக யாத்திரை சென்று வந்த அன்பர்கள் வெவ்வேறு புனிதத் தலங்களிலிருந்து கொண்டு வந்த புனிதக் கற்கள் (இதுவரை சுமார் 1634) ஒரு சிறப்பான மேடையில் அன்பர்களின் பார்வைக்காகவும் தரிசனத்திற்காகவும் வைக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான பக்தர்கள் பாதம் பட்ட இக்கற்களை பொதுமக்கள் தரிசித்து, வலம் வந்து பேரானந்தமும் பெருமகிழ்ச்சியும் அடைகின்றனர். இவை இசைக்குயில் திருமதி M.S.சுப்புலட்சுமி அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.

நோக்கங்கள் பத்து

ஐயப்ப சங்கம் பத்து முக்கிய நோக்கங்களை அடிப்படையாக் கொண்டு இறைப்பணி மட்டும் அல்லாமல் பொது மக்களுக்காகச் சமூகப் பணிகளையும் செய்து வருகின்றது.

  • பக்தர்களுக்கு சேவை
  • தூய்மையான பசுமைச் சூழல்
  • அமைதியான சூழ்நிலை
  • காலம் தவறாமை
  • முறையான பூஜை வழிபாடுகள்
  • ஒளிவு மறைவு இல்லாத நிர்வாகம்
  • சரியான கணக்கு வழக்குகள்
  • பக்தர்களுக்கு ஒழுக்கங்களை நினைவூட்டுதல்
  • மாணவர்களுக்கு நல்ல நீதி நெறிகளைக் கற்பித்தல்
  • எல்லோரையும் பாரபட்சமின்றி நடத்துதல்

பணம் பெரிதல்ல, பகவானின் மேல் உள்ள பக்தியும், அவனது அடியார்களுக்குச் செய்யும் சேவையுமே பெரிது என்ற நோக்கம் மிகச் சிறந்ததாக எண்ணப்படுகிறது.

ஆன்மிகம், உடல்நலம், பொதுநலம் ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன.

UPDATED ON 18-07-2022